மதுரை:மதுரையில் உள்ள பல்வேறு உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள மிகப் பிரபலமான உணவகத்தில் சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தாருடன் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளார். இவர் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் இங்கு தந்தூரி சிக்கன் சாப்பிட்ட இவரது இரண்டு குழந்தைகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் சிவகுமார் உட்பட அக்குழந்தைகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து அக்குறிப்பிட்ட உணவகம் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக தனது சமூக வலைதள பக்கத்தில் சிவக்குமார் தகவலை வெளியிட்டு இருந்தார். இத்தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்த நிலையில், உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் இன்று (ஜூலை 31)அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், அங்கு இருந்த கெட்டுப்போன சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் 3 கிலோ கெட்டுப்போன மாமிசம் மற்றும் நான்கு கிலோ பழைய சாதம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகள் அங்கு முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்து உள்ளது. உணவகத்தில் கண்டறியப்பட்ட மேற்கண்ட குறைகளை 7 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து விளக்கம் அளிக்க உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது.