மதுரை மாவட்ட புறநகர் பகுதியான பரவை, சமயநல்லூர், சோழவந்தான் பகுதி பொது மக்கள் வளர்த்துவரும் பசு மாடுகள், ஜல்லிகட்டு காளைகள் தொடர்ந்து திருட்டுபோகும் சம்பவம் அங்கேறிவந்தது.
இதுதொடர்பாக காவல் நிலையங்களில் அதிகளவில் புகார் அளிக்கப்பட்டதால், காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
சிக்கிய குற்றவாளிகள்
இந்தநிலையில் நேற்று(டிச.21) சரக்கு வாகனம் ஒன்று மாடு ஏற்றி கொண்டு செல்வதைப் பார்த்த காவல்துறையினர், வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது வேனில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாடுகளை திருடி குறைந்த விலையில் சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாடு திருட்டில் ஈடுபட்டு வந்த லோகேஸ்வரன் (21), அழகர்சாமி (30) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்த சமயநல்லூர் காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 ஜல்லிகட்டு காளை, 5 பசு மாடுகளை மீட்டனர்.
சிறையில் அடைப்பு
மேலும் மாடுகளை கடத்துவதற்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.