மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், போதிய விளைச்சல் இருந்தும், வாழை தார், வாழை இலை உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகன், "கடந்த 20 நாட்களுக்கு மேலாக வாழை இலை, வாழைத்தார்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்லமுடியாமல் தவித்துவந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வீசிய பலத்த காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துவிட்டன.
கடன் வாங்கி ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இந்த விவசாயத்தைச் செய்துவந்தோம். தற்போது, மொத்தமும் நஷ்டமாகிவிட்டது. இந்த வாழை இலைகளை விற்றலாவது பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் இந்த ஊரடங்கினால் அதனையும் விற்கமுடியாமல் தவிக்கிறோம்.
வாழை விவசாயி முருகன் பேட்டி அரசு தரும் ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை வைத்து நாங்கள் என்ன செய்வது. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை. அப்படியே வாகனம் கிடைத்து எடுத்துச் சென்றாலும் வாங்குவதற்கு ஆள்வருவதில்லை" என்றார்.
இதையும் படிங்க:தலை, முகக்கவசங்களின்றி உலா: 1 மணி நேரத்தில் 97 பேருக்கு அபராதம்!