தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஈரோடு தேர்தலில் வெற்றி உறுதி... ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான்' - ஈபிஎஸ் தடாலடி - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், தொடர்ந்து அதிமுக கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 23, 2023, 4:04 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

மதுரை:திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாரின் மகளுக்கு இன்று (பிப்.23) திருமணம் நடைபெற்றது. அதே மேடையில் 50 ஜோடிகளுக்கு சமுதாயத் திருமணமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகை தந்தார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர், நிகழ்ச்சி மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''அதிமுகவை முடக்க நினைத்தவர்களின் முகத்திரையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கிழித்து எறிந்துள்ளது. மதுரை மண்ணை மிதித்தாலே நல்ல செய்தி கிடைக்கும், அந்த வகையில் அதிமுகவுக்கு இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தான் வலிமையான கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களின் கட்சி என்பது அதிமுக மட்டும் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக எப்படி திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்களோ அதே போன்று ஈரோடு கிழக்கிலும் ஃபார்முலா இரண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். வாக்காளர்களை மந்தைகளைப் போன்று அடைத்து வைத்து இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத ஒன்றை திமுக செய்து வருகிறது. ஜனநாயகத்திற்கு புறம்பான மக்கள் விரோதச் செயலை திமுக அங்கே செய்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை. அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், இத்தனை அடக்குமுறைகளையும் மீறி அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் அனைவரும் இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பார்கள். இன்னும் சிறிது நாட்களில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நமது வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார் என்ற இனிப்பான செய்தியும் நமக்கு கிடைக்கும்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி, உண்மை இன்றைக்கு வென்றது. அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால், இன்றைக்கு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் இன்றைக்கு நிறைவேறியுள்ளது.

அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்களில், அதிமுகவிற்கு உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒரு சிலரை தவிர, யாராக இருந்தாலும் கட்சியில் மீண்டும் சேர்ப்போம். ஏற்கனவே, 4 வருடங்கள் 2 மாதங்கள் பொற்கால ஆட்சியை நான் வழங்கியுள்ளேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூட அன்றைக்கு பல கருத்துகளைத் தெரிவித்தார்.

ஒரு மாதம் அல்லது 3 மாதத்தில் இந்த ஆட்சி கலைந்து விடும் என்றார். ஆனால், 4 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சிகள் வழங்கினோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வெற்றி என்ற செய்தி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் தான். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இன்றைக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்துவிட்டதால் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிற திமுக அரசு. இதுவே எங்களுக்கு வெற்றி தான். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகும் என்பதால் ஓபிஎஸ் மகன் நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான். பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் படி ஓபிஎஸ்-ம் அவரது மகனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான்” என்றார்.

இதையும் படிங்க:'அதிமுக' ஒற்றைத் தலைமை வழக்கு கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details