மதுரை: திருவட்டாரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இத்திருக்கோவில் உள்ளது. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் மதிப்புமிக்க ஆபரணங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இந்த இரண்டு கோயில்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
மேலும், இந்தக் கோயிலில் கடந்த 1992 ஆம் ஆண்டு மதிப்புமிக்க தங்க ஆபரணங்கள் திருடப்பட்டது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதற்காகக் கோயில் புனரமைக்கப்பட்டது. அப்போது, சில அறைகள் இடிக்கப்பட்டதில் விலைமதிப்பற்ற சில பொருட்கள் மாயமாகின.
எனவே, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை குறித்து முறையாகப் பதிவேட்டைப் பராமரிக்குமாறும், கோயிலில் மாயமான மதிப்புமிக்க ஆபரணங்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நகைகள் கண்டெடுக்கப்பட்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அறை எப்போது இடிக்கப்பட்டது? யார் இடிக்க அனுமதியளித்தது? அறையில் இருந்து என்ன எடுக்கப்பட்டது? அறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன? அவை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளனவா? என கேள்விகள் எழுப்பினார்.
மேலும் கோயில் ஆபரணங்கள் தொடர்பான ஆவணங்களை யார் பராமரிப்பது? கோவில் நகைகள் தொடர்பான ஆவணங்களை நிர்வகிப்பது யார்? என கேள்வி எழுப்பி இது தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என கூறி நாளை மறுநாள் (டிச 06) பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:கனிமங்கள் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பு; “மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது” - துரை வைகோ குற்றச்சாட்டு!