கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிடுவதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கீழடிக்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கீழடி அகழாய்வில் ஈடுபட்டுவரும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் தமிழ் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு கள அருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்ட மத்திய தொல்லியல் துறையிடம் இருந்து அதற்கான அறிக்கையை உடனடியாகப் பெற வேண்டும்.
மத்திய பாஜக அரசின் பிடியில் உள்ள இந்திய தொல்லியல் துறை, கீழடியில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு ஆரிய சாயல் பூசுவதற்கு தொடர்ந்துமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்து மத அடையாளச் சின்னங்கள் கீழடியில் கிடைத்திருப்பதாகவும் பல்வேறு பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.
தொல்லியல் ஆய்வறிஞர்கள் அஸ்கோ பர்போலா மற்றும் நொபுரு கராஷிமா போன்றவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று அறிவித்தனர். திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் நாகரிகம் என்பதும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான்.