தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிப்பூர் நிலை தமிழகத்திற்கும் வரலாம் - திருமாவளவன் பேச்சு - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் வன்முறை மாநில அரசே முன்னின்று நடத்திய அரச பயங்கரவாதம். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தமிழ்நாட்டிலும் இதே போன்ற நிலைமை வரும் என மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார்.

Manipur situation may also come to Tamil Nadu VCK leader Thirumavalavan said in Madurai protest
மணிப்பூர் நிலை தமிழகத்திற்கும் வரலாம்

By

Published : Jul 25, 2023, 6:56 AM IST

மதுரை: மணிப்பூர் வன்முறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூர் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும். இந்த கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கம் எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், ஆர்எஸ்எஸ், பாஜகவும் நுழைந்த ஊர் நன்றாக இருக்காது. ஊரையே அழித்து விடுவார்கள். ஒற்றுமையை சிதைத்து விடுவார்கள். அப்படித்தான் தற்பொழுது மணிப்பூரில் செய்து இருக்கிறார்கள். மணிப்பூரில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மாநிலத்தில் இருந்த இரண்டு பழங்குடியின சமூக மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை அமைத்திருக்கிறார்கள்.

அதானி, அம்பானி போன்றவர்கள் மணிப்பூர் சட்டத்தின்படி அந்த பகுதியில் நிலம் வாங்க இயலாது. அந்த சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த பழங்குடிகளுக்கு இடையே மோதலை அரசே முன்னின்று நடத்தி இருக்கிறது. இது அரச பயங்கரவாதம்.

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டபோதும், நிர்வாணமாக அழைத்து வந்த பொழுதும் நமக்குத் தான் ஐயோ பாவம் அந்த பெண் மனம் எப்படி இருந்ததோ என பெண்ணாகவே மாறி யோசிப்போம். ஆனால், அவர்கள் இதனை வேறு விதமாக சிந்திப்பார்கள்.

குஜராத்தில் இந்து, முஸ்லீம் மோதலை நடத்தியபோது முதலமைச்சராக இருந்த மோடி, தற்போது பிரதமர் ஆகியுள்ளார். இதனால்தான் ஆர்எஸ்எஸ், அத்வானி போன்ற பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் இருந்தபோதும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்து 10 ஆண்டுகளாக பிரதமராக வைத்து இருக்கிறார்கள்.

80 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. மாநில அரசு இதனை தடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். மத்திய அரசு, அமைதி திரும்பினால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்று கண்டு கொள்ளவில்லை. மணிப்பூரில் கலவரம் செய்து அதன் வழியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் சட்டத் திருத்த செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். நாங்கள் சிறிய கட்சிதான், மாநில கட்சி தான். ஆனால், கொள்கையில் இமாலயம்போல உறுதியானவர்கள். பெரியவர்கள் அம்பேத்கரின் மாணவனாக, பெரியார் பிள்ளையாக இதை சொல்வது எனது கடமை.

மணிப்பூரில் நிகழும் கலவரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், தமிழ்நாட்டிலும் இதே போல நிலைமை வரும், அப்போது திருமாவளவன் இருப்பேனா, இல்லையா என்று தெரியவில்லை” என பேசினார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு : திமுகவிற்கு எதிராக ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் டிடிவி பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details