மதுரை:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த நாராயணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்று. இந்து கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படும். அவற்றில் பாலாலயம் என்பது மிக முக்கியமான விழாவாக கருதப்படும். குடமுழுக்கிற்கு என தேதி குறிப்பிட்ட பின்னர் கோயிலை பராமரித்து செப்பனிட்டு, புனரமைத்து, கடவுள் சிலைகளை ஆகம ஐதீகங்கள் அடிப்படையில் மந்திர உருவேற்றுவது போன்ற பணிகள் நடைபெறும்.
இந்த பணிகள் தோராயமாக 18 மாதங்களில் நிறைவடையும். அதன் பின்னர் குறிப்பிடப்பட்ட நாளில் சிவாச்சாரியார் தலைமையில் குடமுழுக்கு விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடத்தப்படுவது வழக்கம், அதன்படி 2021ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கரோனா நோய்த்தொற்று காரணமாக நடைபெறவில்லை. குடமுழுக்கிற்கான தேதியை முடிவு செய்யவும், அதற்கு முன்பான கோயில் சீரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.