மதுரை: கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தலமாகும். கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஓர் வழக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு, "கோயில் ஒரு வழிபாட்டுத் தலமாகும். கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோயிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது.