தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”இனி மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு கிடையாது” அமைச்சர் செல்லூர் ராஜூ! - Water from Vaigai Dam to Madurai

மதுரை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முத்துபட்டியிலுள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கு காட்சி
முத்துபட்டியிலுள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கு காட்சி

By

Published : May 22, 2020, 3:31 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வென்ட்டிலேட்டர் உள்ளிட்ட 22.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் மதுரை முத்துப்பட்டியில் வாழும் குடிசை பகுதி மக்களுக்கு கரோனா தொற்று எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர், மருத்துவர் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ”கரோனா தொற்று நமக்கு வராது என மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. இதற்குத் தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதன்பிறகுதான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அதுவரை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வருவோரிடம்தான் அதிகம் கரோனா தொற்று உள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்;”கரோனா தடுப்புக்காக மக்களுக்கான உதவிகள் செய்ய இந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் ஆனாலும், எதிர்க்கட்சி எம்எல்ஏ ஆனாலும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என யார் கோரிக்கை வைத்தாலும் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும்.

மதுரை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, வரும் 27ஆம் தேதி மதுரை வந்து சேரும் வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது மதுரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, மதுரைக்கு இரும்பு குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை கரோனா பாதிப்பு முடிந்ததும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதன் பின்பு மதுரை மக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்கும் நிலை உருவாகும்” என்றார்.


இதையும் படிங்க:12 விதமான நோய்களுக்கு ஏற்ப, உயர் மருத்துவர்கள் குழு நியமனம்- அமைச்சர் விஜயபாஸ்கர்.

ABOUT THE AUTHOR

...view details