மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மயிலாடுதுறை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், மோதல் இருப்பதாகக் கருதுவது பொருளற்றது. உலக நாடுகளிடம் இந்தியா குறித்த தவறான பார்வையை இது போன்ற சித்தரிப்புகள் ஏற்படுத்தும்.
இந்திய நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதற்கு மத்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு. இங்கு யாரும் சர்வாதிகாரம் செய்துவிட முடியாது. ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை ஜனநாயக நெருக்கடியாக கருதக்கூடாது. ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் தேசநலன் என்று வரும்போது அனைவரும் ஒன்றாகவே சிந்திக்க வேண்டும். இந்திய சட்ட அமைச்சகம் ஒரு பொதுவான அடிப்படை சொற்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உட்பட 22 மாநில மொழிகளில் தொழில்நுட்ப வசதியுடன் மொழி பெயர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் வாயிலாக மொழி பெயர்த்தாலும் மீண்டும் அதனை சரிபார்க்க வேண்டியதாக உள்ளது.
மதுரை வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நீதித்துறையும், தமிழ்நாடு அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவதே தமிழ்நாட்டில் நீதித்துறைக்கான மேம்பாட்டிற்கான முக்கிய காரணமாக உள்ளது. நீதித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி பல மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதற்கு யாரையும் குறை சொல்வதற்கில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு நீதி வழங்குவதில் தமிழக நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டன.