மதுரை:மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி ஒளி மற்றும் ஒலி பெருக்கி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதன்முறையாக இரண்டு நாட்களுக்கு இந்த இசைப் போட்டி நடைபெற்றது.
தாதம்பட்டி கண்மாய் அருகில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி உரிமையாளர்கள் தங்களது மைக்செட் கருவிகளுடன் பங்கேற்றனர். போட்டியில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் கொண்டு வந்த கூம்புவடிவ குழாயினை பொருத்தி அதில் பாடல்களை இசைக்கச் செய்தனர். அவ்வாறு இசைக்கும் போது யாருடைய ஒலிபெருக்கி இரைச்சல் இல்லாமல் தெளிவாக மற்றவர்களுக்கு கேட்கிறதோ அந்த ஒலிபெருக்கிக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் முதல் பரிசினை தேனிமாவட்டம் தருமாபுரி நியூ நண்பன் ரேடியோஸ் உரிமையாளரும், இரண்டாம் பரிசினை அதே மாவட்டத்தைச் சேர்ந்த உப்புக்கோட்டை இசைவல்லரசு ரேடியோஸ் உரிமையாளரும், மூன்றாம் பரிசினை மதுரை மாவட்டம் பாறைப்பட்டி கே.பி.எஸ் ரேடியோஸ் உரிமையாளரும் பெற்றனர்.