மதுரை,மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமு (35) இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரலேகா (30), இவர்களுக்கு திருமணமாகி 12 வயதில் பெண் குழந்தையும் மற்றும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். மனைவி சுந்தரலேகா தையல் வகுப்பிற்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு தையல் வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.
தையல் வகுப்பு முடித்து விட்டு வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு உறவினரின் விசேஷ வீட்டிற்கு செல்வதற்காக நகை அணிவதற்காக நகை பெட்டியில் தேடி பார்த்தபோது பெட்டியில் வைத்திருந்த ரூ.7,35,000 மதிப்புள்ள 25 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சுந்தரலேகா இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அங்கு சென்ற திருமங்கலம் நகர் போலீசார் காணாமல் போன நகைகள் வீட்டின் பூட்டை உடைக்காமல் எப்படி காணாமல் போனது? யார் திருடியது? இந்த திருட்டு சம்பவத்தில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனரா? யாரும் எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.