மதுரை விமான நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை மடக்கிபிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் ஒரு ஏர்கன் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
பின்னர் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவர் வைத்திருந்த பேக்கில் மேலும் மூன்று ஏர்கன் துப்பாக்கி மற்றும் 4 செல்போன்கள் இருந்தன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் அஸ்வத்தாமன் (21) என்பது தெரியவந்தது. பட்டதாரி இளைஞரான இவர், கல்லூரியில் படிக்கும்போதே என்சிசி(NCC)இல் இருந்ததாகவும், தற்போது அவர் மனநலம் பாதித்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையம் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை நடத்திய விசாரணையில், தான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலனாக செல்ல வந்தேன். டெல்லி செல்வதற்காக தனக்கு தனிவிமானம் வரவுள்ளது. தனக்கு 1000 கோடி சொத்து இருப்பதால் என்னை உங்களால் தொடக்கூட முடியாது. புதிதாக வங்கி தொடங்கி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவுள்ளேன்.