மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று நடிகர் மதன்பாப் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் பேசிய மதன்பாப், ' அத்திவரதரின் உண்மையான வரலாறு அவருக்குப் பூஜை செய்யும் குருக்களுக்கே கூட தெரியாது. அத்தி மரம் தான் போதி மரம். அத்தி மரத்தின் கீழே அமர்ந்து தவம் செய்யும் பொழுது அந்த மரத்திலிருந்து வெளிப்படும் வாயுக்களால் வைட்டமின் ஏ கிடைக்கிறது. அது நமக்குள் மிகப்பெரும் சிந்தனை மாற்றத்தைத் தூண்டுகிறது. அந்த அத்தி மரத்தால் செய்யப்படுகின்ற இயேசு பிரான், அல்லாஹ் அல்லது அத்திவரதர் சிலைகள் என யாராக இருந்தாலும்; அந்த ஆற்றலை நமக்கு தருவார்கள் என்பது தான் அறிவியல் உண்மை' என்றார்.
மேலும் அவர்,'நகைச்சுவை என்பது உள்ளார்ந்து வெளிப்பட வேண்டும். ஒருவரின் கண், கன்னம், அடி மனது முழுவதும் அதனை உணர்ந்து சிரிக்க வேண்டும். அப்போதுதான் உதட்டின் வழியாக உண்மையான நகைச்சுவை வெளிப்படும்' எனக்கூறினார்.
அதேபோல் 'எந்த ஒரு பிரச்னையையும் அந்த பிரச்னைக்குள் இருந்து தீர்வைக் கண்டறிய வேண்டும். இளம் தலைமுறையினர் புதிய விஷயங்களை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
அத்திவரதரைப் பற்றி நடிகர் மதன்பாப் பேசிய சர்ச்சைக் கருத்து இந்த உலகத்தைப் பொறுத்தவரை, முதலில் புதிய விஷயங்களை 'எதிர்க்கும், பிறகு ஏளனம் செய்யும், அதற்குப் பிறகு தான் ஏற்கும்' இந்த யதார்த்தமான உண்மையை உணர்ந்து தான், நாம் செயலாற்ற வேண்டும் என்றும் நடிகர் மதன்பாப் தெரிவித்தார். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் பேச வந்த நடிகர் மதன் பாப், சம்பந்தமில்லாமல் அத்தி வரதரைப் பற்றி பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.