அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூர் செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு இருந்த நிலையில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த நண்பர்களை பார்க்கச் சென்று விபத்தில் உடல் சிதறி இறந்த இளைஞனின் சோக கதை.
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு அதற்காக விடா முயற்சியுடன் போரடி கொண்டிருந்த இளைஞர் விக்கி. மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ள புளிய கவுண்டன்பட்டியில் தனது அம்மா சுமதி மற்றும் தம்பி ஜெயசீலனோடு வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று, இறந்து விட குடும்பத்தின் மொத்த சுமையையும் விக்கியின் அம்மா சுமதியே தாங்கி தனது இரு ஆண் பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.
சுமதி தனது வீட்டின் அருகே உள்ள பட்டாசு கம்பெனியில் தினக் கூலிக்கு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த விக்கி, அதற்கு மேல் படிக்கப் பிடிக்காமல் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவரது மூக்கில் சதை வளர்ந்து இருப்பதாக கூறி நிராரிக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து போனார்.
பின்னர் பல்வேறு இடங்களில் வெல்டிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் வெற்றி பெற்று அதே வெல்டிங் பணியை சிங்கப்பூர் சென்று மேற்கொள்ளும் கனவில் மிதந்து கொண்டிருந்தார். வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அழகுசிறை கிராமத்தின் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது நண்பர்கள் வல்லரசு மற்றும் கோபியை பார்ப்பதற்காக நேற்று(நவ.10) பிற்பகல் அங்கே சென்று இருந்தார். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தனது நண்பர்களோடு விக்கியும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.