மதுரை விமான நிலயைத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ’இலங்கை தேர்தலில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார். 2009இல் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராஜபக்ச குடும்பம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கோத்தபய ராஜபக்ச பதவியேற்றவுடன் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ஏறத்தாழ 3,000 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட நிலையில் மீன் பிடிக்காமல் கரை திரும்பி இருக்கிறார்கள். ராஜபக்ச குடும்ப ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தமிழர்களுக்கும் பெரும் தீங்கு விளையும் என்பதற்கு இது ஒரு சான்று.
தமிழின விரோதிகளான ராஜபக்ச குடும்பத்தைக் கடந்த 10 ஆண்டுகளில் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் ஏற்றியிருந்தால், அவர்களை தற்போது தேர்தலில் போட்டியிடாமல் தடுத்து இருக்கலாம். ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகம் இந்த இனப்படுகொலையை விசாரிப்பதில் காட்டிய நிறுத்தத்தின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.