தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்தத் துறைகளான வருவாய் மற்றும் பேரிடர், தகவல் தொழில் நுட்பம் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய இரண்டிற்கும் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மதுரை மண்ணின் மைந்தர்கள் ஆவர். தற்போது, இருவருக்குமிடையே உரசல் இருந்து வருவதாக அதிமுகவினர் அரசல் புரசலாக பேசிவருகின்றனர். இந்நிலையில், கரோனா நிவாரண நிதி வழங்குவதில் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜுவின் சேவையைப் பாராட்டி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி, ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்களை உசுப்பேற்றியுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாளர்களும், தங்கள் பங்கிற்கு செல்லூர் ராஜூவுக்குப் போட்டியாக சுவரொட்டி அடித்து, மதுரை மாநகர் முழுவதும் ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.