மதுரை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்வானவர் கார்த்தி் சிதம்பரம். இவரது தந்தை ப.சிதம்பரம் முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தது மட்டுமன்றி அக் கட்சியின் உயர் மட்ட அளவில் மிகவும் செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தனது மனதில் பட்ட கருத்துக்களை தயக்கமின்றி தெரிவிப்பவர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளிடமும் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். மேலும், தனது கட்சியின் நிர்வாகிகளைக் கூட மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது, தங்கள் பகுதிக்கு வரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் மனுக்களை வழங்கி வருகின்றனர். மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும் கார்த்தி சிதம்பரம், இதுவரை காங்கிரஸ் கட்சி சின்னம், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படம் கொண்டு அச்சிடப்பட்டு இருந்த தனது லெட்டர் பேடில் பதில் அளித்து வந்தார்.
தற்போது அவற்றைத் தவிர்த்துவிட்டு தனது பெயர் மட்டும் உள்ள லெட்டர் பேடில் பதில் அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது கட்சி முன்னோடி தலைவர்களின் படங்களை தனது லெட்டர் பேடிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மதுரை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.