தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2020, 6:23 PM IST

ETV Bharat / state

'கள்ளழகர் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தேனூர் பாரம்பரியம்'

மதுரை: ’தேனூர்காரர்களுக்கு மரியாதை செலுத்துவது ஒருபுறமிருக்கட்டும், மண்டூக முனிவர் நிகழ்வுக்காக விரதமிருந்து கொண்டு சென்ற பொருள்களை முறைப்படி பெற்றுக்கொள்ள விடுத்த கோரிக்கையைக்கூட அழகர் கோயில் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என்பதே வேதனையாக இருக்கிறது’

அழகர்
அழகர்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா மதுரையின் வரலாற்று அடையாளம் மட்டுமில்லாமல், உலகப் புகழ்வாய்ந்த ஆன்மிகப் பெருவிழாவாகவும் திகழ்கிறது. 400 ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்ட இந்தத் திருவிழா தேனூர் கிராமத்தார், மதுரைக்கு அளித்த கொடையாகும்.

வரலாற்றைப் புரட்டினால்...

முன்னொரு காலத்தில், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு தேனூர் கிராமத்தில்தான் நடைபெற்று வந்தது. மன்னர் திருமலை நாயக்கரின் காலத்தில், அதனை மதுரைக்கு மாற்ற விரும்பியபோது, மறுக்காமல் தேனூர் மக்கள் மனமுவந்து அனுமதித்தனர். அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, மதுரை வண்டியூர் வைகை ஆற்றின் நடுவே மண்டகப்படி ஒன்றினை அமைத்து, மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வை திருமலை மன்னர் நடத்தினார். தேனூர் மண்டகப்படி என அழைக்கப்படும் இம்மண்டபம், அழகர் திருவிழாவின் முக்கியமான இடத்தைப் பெற்றுத்திகழ்கிறது.

அழகர்

கரோனாவால் மாறிய பாரம்பரியம்?

கரோனா தீநுண்மி பெருந்தொற்று காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, சித்திரைத் திருவிழாவை ரத்து செய்தது. இதனால், சம்பிரதாயத்தின் அடிப்படையில் அழகர்விழா திருமாலிருஞ்சோலை கள்ளழகர்கோயிலில் நடைபெற்றது. இந்த திருவிழாவின், முக்கிய அங்கமாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வு கிராமத்தார் சார்பாக நடைபெற்றிருக்க வேண்டும், ஆனால், நடைபெறவில்லை.

குதிரை

என்ன சொல்கிறார்கள் தேனூர்வாசிகள்?

திருவிழாவிற்கு அழைக்கப்பட்டதே தவிர, உரிய அங்கீகாரம் கோயில் நிர்வாகத்தால் (அ) அங்குள்ள அர்ச்சகர்களால் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தேனூர் பகுதியைச் சேர்ந்த கரைகாரர் கருப்பு, 'நான், தேனூர் கிராமத்தின் நீர் பாய்ச்சியாக இருக்கிறேன். வழக்கமாக சித்திரைத் திருவிழாவின்போது, ஒரு மாதம் விரதம் கடைபிடிப்போம். அதேபோல, இந்த ஆண்டும் விரதம் கடைபிடித்து கிராம மக்கள் சார்பாக, கோட்டை தோரணம், விசிறி, கொக்குடன் மண்டூக முனிவருக்குச் சாபம் போக்கும் நிகழ்வுக்கு கொண்டு சென்றோம். பாரம்பரிய வழக்கப்படி, அதற்காக எனக்கு கோயில் சார்பாக மரியாதை செய்வார்கள்.

தேனூர்காரர்கள்

இந்தாண்டு, அழகர்கோவில் நிர்வாகத்தால், நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். ஆனால், எங்களை நிகழ்வு நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. கையோடு கொண்டு சென்றிருந்த கொக்கைப் பறக்கவிடவும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோயிலின் கோட்டை வாசலுக்கு கொக்கை கொண்டு வந்து நாங்கள் பறக்கவிட்டோம்' என்றார்.

அழகர்

இது குறித்து, இளைஞர் சேது மாதவன், 'தேனூர் கிராமத்தில், சுழியம் நண்பர்கள் அமைப்பின் சார்பாக மீனாட்சி திருவிழாவை நேரலை செய்தது போன்று, அழகர் திருவிழாவையும் நேரலை செய்ய வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த கோரிக்கை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் ஏற்கப்பட்டது. இருப்பினும், தேனூரிலிருந்து சென்ற எங்களை கோயிலின் முகப்புப் பகுதியிலேயே நிறுத்திவிட்டார்கள். மரியாதை செலுத்துவது ஒருபுறமிருக்கட்டும், மண்டூக முனிவர் நிகழ்வுக்காக அனைத்து ஏற்பாடுகளுடனும் சென்றிருந்தோம். அந்தப் பொருள்களை முறைப்படி பெற்றுக்கொள்ள விடுத்த கோரிக்கையைக்கூட அழகர் கோயில் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.

’கள்ளழகர் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தேனூர் பாரம்பரியம்’

தேனூரின் தண்டல்காரர், மடைகாரரை மட்டுமாவது உள்ளே அனுமதித்து இருக்கலாம். கோயிலினுள்ளே அலுவலர்கள், அர்ச்சகர்களின் குடும்பத்தினரோடு 200-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்திருக்கும்போது, திருவிழாவிற்குச் சொந்தக்காரர்களான எங்களை அனுமதிக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது'என்றார்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை மதுரைக்கு தாரைவார்த்து மகிழ்ந்தவர்கள், தேனூர் கிராமத்தினர். இந்தாண்டு, அழகர் திருவிழாவில் அவர்கள் அவமதிக்கப்பட்டிருப்பது, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தீரா வேதனையை அளித்திருக்கிறது. தேனூர் பாரம்பரியத்தின் நிராகரிப்பு, கள்ளழகர் திருவிழாவின் ஆறாத வடு.


இதையும் படிங்க:'அரசு தளர்வு அளித்தால் போதும்... நாங்கள் பாதுகாப்பாக சிகை திருத்துவோம்'

ABOUT THE AUTHOR

...view details