மதுரை:தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் கீதாபாய். இவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டில் மண்டல பாஸ்போர்ட் உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது, இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பெயர் மற்றும் தனது கணவரான நரசிம்மபாய் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி முதலீட்டு பத்திரங்களை வாங்கி இருப்பதாக சிபிஐக்கு புகார் சென்று உள்ளது.
பின்னர் அது உறுதி செய்யப்படவே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கீதாபாய் மற்றும் அவரது கணவர் நரசிம்மபாய் ஆகியோரை கைது செய்தனர். அது மட்டுமல்லாமல், இவர்களிடம் இருந்து 17.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி வைப்பு நிதி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டில், இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டது. எனவே, இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் நேற்று (ஜூன் 8) விசாரித்தார். அப்போது சிபிஐ தரப்பில், "மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவண, ஆதாரங்கள் உள்ளன" என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக் கூறி கீதாபாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:இறந்த கணவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்த வழக்கு: முழு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு