மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இவரது நியமனத்தை 2017ஆம் ஆண்டில் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இவரது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி, ஜேசுபிரபா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்ட நிலையில், 2014 முதல் நியமனத்தை அங்கீகரிக்குமாறு தனி நீதிபதி 2019 ஆம் ஆண்டில் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 12) உத்தரவை பிறப்பித்தது. அதில், “ஆசிரியர்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணி நியமனங்கள் அந்தந்த திருமறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு, மூப்பு பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு திருமறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையான பதிவேட்டை பராமரித்து வருகின்றன.