மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள ஆர்.எஸ் மங்களம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடங்கள் கட்ட உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று (ஜூன் 5) விசாரணைக்கு வந்தது. சேதமடைந்த சுகாதார நிலையத்தை ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் மேலும் சுகாதார நிலையம் எப்போது இடிக்கப்படும் எப்பொழுது புதிய கட்டிடம் கட்டப்படும் என்பது குறித்தும் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலரான கலந்தர் ஆசிக், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "ராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள், மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் RS மங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பாம்பு கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சைகளை RS மங்களம் துணை சுகாதார நிலையத்தில் தான் பெற்று வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடம் தற்பொழுது பலவீனமாக காணப்படுகிறது. இப்போது மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன.
இதனால், இங்கு பணிபுரியக் கூடிய செவிலியர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகின்றனர். இதனால் துணை சுகாதார நிலையம் பூட்டியே வைக்கும் அவலநிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு திருவாடனை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.