தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் முழு சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்' - இலவச வீட்டு மனை பட்டா

அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமின்றி, முழு சொத்துகளும் பறிமுதல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

The entire assets of government employees involved in malpractices should be confiscated
The entire assets of government employees involved in malpractices should be confiscated

By

Published : Nov 30, 2020, 2:16 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், "அரசின் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவின் இடத்தில் இருந்து என்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பினர், மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மனுதாரரின் மகன் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அவர்களின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரிலும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

இந்த வழக்கை முன்னதாகவே விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்ற இருவரையும் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டனர். இவர்களது குடும்பத்தில் உள்ள பலருக்கும் வீட்டு பட்டா வழங்கப்பட்டது நீதிமன்றத்திற்கு தெரிய வரவே மனுதாரர் மனுவை திரும்பப் பெற மனு தாக்கல் செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர் என்பவர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர் தவறான முன்னுதாரணமாக உள்ளார்.

எனவே இந்த வழக்கில் வருவாய் துறை செயலர், சமூக நலத்துறை செயலர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறும் அரசு ஊழியர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. அரசு ஊதியம் பெறும் ஒரு ஊழியர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை சமூக விரோத செயலாக நீதிமன்றம் பார்க்கிறது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி அவர்கள் சமூக விரோதிகளே. முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும்.

முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும். அரசு ஊழியர் ஒருவருக்கு ஐந்து பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது வெறும் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் கண்துடைப்பு ஆகும்.

இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அந்த தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள் சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது. அரசு ஆசிரியர் தன் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் சாதி சார்ந்த சங்கங்களும் மதம் சார்ந்த சங்கங்களும் வைத்துள்ளனர் இதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று சரமாரியான கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுதாரர் மற்றும் மனுதாருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் குறித்த முழு விவரங்களையும் விசாரனை செய்து தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இவர்கள் மீது காவல்நிலையத்தில் கொடுக்கபட்ட முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அரசு நிலத்தில் சட்டவிரோதமாக இலவச பட்டா' - தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details