தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கியார்க் புயல் எதிரொலி - அரசு பதிலை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: கியார்க் புயலில் காணாமல்போன  மீனவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக்குழு அமைக்கக் கோரிய வழக்கில், அரசு அளித்துள்ள விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்

By

Published : Nov 9, 2019, 8:43 AM IST

குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் வங்கக் கடலில் கியார்க் புயல் உருவானது. அதற்கு முன்பாகவே பல மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில், பலர் கரை திரும்பிவிட்டாலும் இன்னும் பலர் திரும்பவில்லை.

குறிப்பாக ஜெர்மியா, லூர்து அன்னை, புனித மேரி, கார்மேல் மாதா, பசிலிக்கா ஆகிய படகில் சென்ற 59 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. மீனவ சங்கம் சார்பில் கடலில் சென்று தேடிய நிலையிலும் அவர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆகவே, கியார்க் புயலில் காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் விமானம் மூலமாக மீனவர்களைத் தேடியபோது, அவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் அதனை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:குடிமராமத்துப் பணியில் முறைகேடு? நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details