தமிழ் சமூகவாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று சினிமா! தமிழ்ச்சங்கம் முதல் டிஜிட்டல் வாழ்க்கை வரை, நாயக வழிபாட்டிற்குப் பழகிப்போன தமிழர்கள், தங்களின் எல்லாக் கொண்டாட்டங்களையும் திரைப்படங்களுடன் தான் பிணைத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. விழாக்காலங்களில் வெளியாகும் தங்களின் மனம் கவர் நாயகர்களின் படங்களைக் கொண்டாடும் ரசிகர்கள், சாதாரண காலங்களில் வெளியாகும் நாயகர்களின் பட வெளியீடுகளையும் விழாவாகக் கொண்டாடத் தவறுவதில்லை.
இந்த நாயகர்கள், ரசிகர்கள் பிணைப்பிற்குப் பாலமாக இருப்பது திரையரங்கங்கள். டென்ட் கொட்டாய் காலம் தொடங்கி, மல்டிபிளக்ஸ் காலம் வரை இந்த பிணைப்பிற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் சென்னைத் தத்தளித்து வெள்ளம் வடிந்ததும், மூன்று நாள் முடங்கிக் கிடந்த சோகத்தைத் தீர்க்க ரசிகர்கள் நாடியது திரையரங்குகளைத் தான். வரலாறு இப்படி இருக்க, கரோனா பொது முடக்க நீண்ட தூக்கம் துறந்து, திரையரங்குகள் நவ.,10ஆம் தேதி திறக்கப்பட்டாலும், ரசிகர்களின் வருகை குறைவாகவே இருக்கின்றன. சின்னத்திரை ஆதிக்கம், ரசனை மாற்றம், டி.டி.ஹெச்., வருகை என எல்லாக் கால மாற்றத்திலும் திரையரங்குகளை ரசிகர்கள் கைவிட்டதில்லை.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக மட்டும் இல்லை.. தங்களின் வாடிக்கையாளர்களான ரசிகர்களின் நலனில் ரிஸ்க் எடுக்க விரும்பாத திரையரங்க நிர்வாகம், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் சிரத்தையுடன் கடைப்பிடிக்கின்றது. "சினிமா தியேட்டருக்கு வரக்கூடிய ரசிகர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது. 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக சினிமாவை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்காகவே திரையரங்கு நடத்தி வருகிறோம். வரக்கூடிய ரசிகர்களுக்கு அரசு கூறிய அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்படங்கள், பிரபலமான நடிகர்கள் நடித்த படங்கள் ஏதும் வராததால் குறைந்த அளவு ரசிகர்களே படம் பார்க்க வருகின்றனர்" என்கிறார், கோவை பாபா காம்ப்ளஸ் உரிமையாளர், பாலு.
எட்டு மாதங்களுக்குப் பிறகு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள், திரையரங்கம் வர இன்னும் தயக்கம் காட்டத்தான் செய்கின்றனர். திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சிகள் முடிந்த பின்பும், திரையரங்குகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் குறைவான ரசிகர்கள் வந்த நிலையில், தற்போது ஓரளவு அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர். பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால், இந்த நிலைமை மாறலாம்' என்கிறார், திரைப்பட விநியோகஸ்தர், வாசன்.
கரோனா பொது முடக்கம் மக்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறது. அந்த மாற்றம் ரசனையிலும் எதிரொலித்துள்ளதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. நிச்சயமாக இல்லை என்கிற சென்னை உதயம் திரையரங்கு மேலாளர் ஹரிஹரன், "ஓடிடி வரவால் திரையரங்கு வருவோரின் எண்ணிக்கை பாதிக்காது; என்ன இருந்தாலும் திரையரங்கில் வந்து சினிமா பார்க்கும் அனுபவம், வீட்டில் இருந்து கொண்டு பார்ப்பதில் நிச்சயம் வராது என்பதால் ஓடிடியால் திரையரங்குகளுக்குப் பாதிப்பு இல்லை. நீண்ட நாட்களுக்குப்பின் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் குறைந்த அளவே பார்வையாளர்கள் வருகிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களே வருவதால், திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கைப் பாதியாக குறைந்துள்ளது.
மக்களைப் பொறுத்தவரை, கரோனா அச்சத்தில் இருந்து மெள்ள மீண்டு வந்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால் இந்த நிலை மாறி, மீண்டும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்படும்' என்றார், நம்பிக்கை மிளிர.