மதுரை:சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்கள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில், சமீபகாலமாக பல பள்ளிக்கூடங்களின் மேற்கூரை மற்றும் கட்டடங்கள் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
ஆனால், உயரிழப்புகள் இல்லை. குறிப்பாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.