சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தை தூக்கிய வீசிய கார் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி மதுரை:திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் மதுரை - தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளி பேருந்துகளும் சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று (செப். 29) காலை சுமார் 11.30 மணியளவில் சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் நெடுமதுரையை சேர்ந்த அருள்மணி (வயது 48) மற்றும் பெருங்குடியை சேர்ந்த காசிநாதன் (வயது 70) ஆகியோர் முற்பட்டனர். அப்போது எலியார்பத்தி சுங்கச்சாவடியில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் காரை ஓட்டி வந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரை ஓட்டி வந்த நபர் ஹூண்டாய் கார் நிறுவனத்தில், கார் பழுது பார்க்கும் ஊழியர் என்பதும் வாடிக்கையாளரின் காரை எடுத்து வந்த போது விபத்து ஏற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தின் லெமன் சிட்டி; சோதனையில் இருந்து மீண்டு வருமா?