மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கு திமுக நீதிமன்றத்தை நாடிய போதே அதிமுகவின் வாக்கு வங்கி என்ன என்று தெரிந்திருக்கும். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட மக்கள் நினைக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கையின் முடிவு அதிமுக வெற்றி அறிவிப்பாகத் தான் இருக்கும்.
பாஜகவுக்கு பெருந்தன்மை அதிகமாக இருப்பதன் காரணமாகத்தான் காங்கிரஸ் ஆட்டம் போடுகிறது. மம்தா பானர்ஜி பிரதமரையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த தேசத்தின் மீதும் கடுமையான புகாரைக் தெரிவித்து வருகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொறுமையாக ஜனநாயகத்தின் காவலனாக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் இந்தியாவில் பிரச்னையை ஏற்படுத்த முயல்வதற்கான செயலை ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது தமிழ்நாட்டில் கோலம் போடவில்லை. நாட்டை அலங்கோலப்படுத்துவதற்கு தான் கோலம் வடிவில் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். அவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை. தேசத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர். இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர். திருமாவளவன், கே.எஸ்.அழகிரி போன்றவர்கள் நாட்டை அலங்கோலமாக்க கோலம் போடத் தொடங்கியுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மைத்துறை போன்ற ஒவ்வொரு துறையிலும் வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக இந்தியா திகழ்கிறது. ஆகையால் வல்லரசு நாடுகளில் ஒரு சில நாடுகள் இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஆங்காங்கே பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்னிறுத்தி இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிகிறது' என்றார்.
இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்!