மதுரை :கொலை வழக்கில் சிறையில் உள்ள மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "வில்லூரைச் சேர்ந்த சுகந்தா என்பவர் தனது கணவர் (புவனேஸ்வரன்) காணவில்லை எனக் கூறி வில்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வில்லூர் காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள் காணவில்லை என்று புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் தன்னைச் சேர்த்து கைது செய்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக தன் மீது எவ்வித புதிய வழக்குகளும் பதியப்படவில்லை. புவனேஸ்வரன் காணவில்லை எனக் கூறும் வழக்கில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக சித்தரித்து தன்னை வழக்கில் சேர்த்து கைது செய்யப்பட்டு தற்போது நான் சிறையில் உள்ளதால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கு தற்போது ஒட்டப்பிடாரம் காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதலால், வழக்கில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும்" என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, "புவனேஸ்வரன் காணாமல் போய்விட்டார் என்று தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அந்த புகாரை கொலை வழக்காக மாற்றி மனுதாரரை கைது செய்து உள்ளனர். மனுதாரர் கொலை செய்ததற்கான எந்த ஒரு சாட்சியம் இல்லை" என்று வாதிட்டார்.