தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் வித்தியாசமாக சேவை செய்யும் 'பேக்கரி' - மதுரையில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச பிரட்

மதுரை: கூடல்நகர் ரோட்டில் அமைந்துள்ள ஏ.ஆர்எம் பேக்கரி ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவசமாய் பிரெட் வழங்கி, தனது மனிதாபிமானத்தை நிரூபித்துள்ளது.

மதுரையில் ஒரு வித்தியாசமான சேவை
மதுரையில் ஒரு வித்தியாசமான சேவை

By

Published : Apr 24, 2020, 7:21 PM IST

Updated : Apr 24, 2020, 8:33 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவால் பல ஏழை, எளிய அடித்தட்டு குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போதுமான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அவர்கள் படுகின்ற துன்பங்கள் சொல்ல முடியாதவை. இந்நிலையில் ஆங்காங்கே பல தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவி செய்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஒரு வித்தியாசமான சேவை

இந்நிலையில் தன்னுடைய பேக்கரி மூலமாக இலவசமாக பிரெட் வழங்கி உதவுகிறார், ஏ.ஆர்எம் பேக்கரி உரிமையாளர் ராமசாமி. இவர் மதுரையில் உள்ள மடீட்சியா கிளப்பின் தலைவராகவும் உள்ளார்.

இதுகுறித்து ராமசாமி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அலைபேசியில் கூறியதாவது, 'எங்களது பேக்கரியில் ஓரமாக வைக்கப்பட்டுள்ள அட்டைப்பெட்டியில் பிரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளோம். அதில் ஆளுக்கு ஒரு பிரெட் பாக்கெட் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை ஒட்டி வைத்துள்ளோம். நாள்தோறும் 30 பிரெட் பாக்கெட்டுகள் ஏழை, எளிய மக்கள் எடுத்து பயனடைகின்றனர்.

இந்த சேவையை நாங்கள் தொடங்கி இன்றோடு ஆறு நாள் ஆனது. வருகின்ற மே மூன்றாம் தேதி வரை இச்சேவையை தொடர உள்ளோம். எங்களது பேக்கரியின் வாடிக்கையாளர்கள் சிலர் நாங்கள் செய்கின்ற சேவையைப் பார்த்து, அவர்களும் தங்களால் இயன்ற உதவியை எங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இவை மிக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பிரெட். இது குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் ஏற்ற உணவாகும். பேக்கரியில் நாங்கள் விற்பனைக்கு வைக்கின்ற அதே பொருளைத் தான் இலவசமாகவும் வைத்திருக்கிறோம். இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், ஒரு நபருக்கு ஒரு பிரெட் என்பது தான். இந்த சேவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பேக்கரியின் வாடிக்கையாளர் சுரேஷ், 'கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுகின்ற இந்த காலகட்டத்தில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். இச்சூழலில் ஏழை, எளிய மக்களுக்கு இதுபோன்ற உதவி மிக மிகத் தேவை. இதனைப் பின்பற்றி மற்ற பேக்கரி கடைக்காரர்களும் முன்வந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: அடுத்த சாகுபடிக்கு மூலதனம் இல்லை: விவசாயிகளை புலம்பவைத்த ஊரடங்கு!

Last Updated : Apr 24, 2020, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details