மதுரை:வருமான வரித்துறையின் துணை இயக்குநர் யோக பிரியங்கா, உதவி இயக்குநர் கிருஷ்ணகாந்த், ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த மே 25ஆம் தேதி வருமான வரி முறைகேடு செய்ததாக கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மாரப்ப கவுண்டர், குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தோம்.
சோதனை நடைபெற்ற இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். நாங்கள் சோதனை செய்த உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம். வெளியே கூடி இருந்த நபர்கள் மோசமான வார்த்தைகளில் வருமான வரி துறையினரை பேசினர். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கூட்டம், வருமானவரி துறையினரான எங்களை தாக்கியதோடு பணி செய்ய விடாமல் தடுத்தனர். கூட்டம் அதிகரிக்கவே, அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த இடங்களை விட்டு வெளியேறினோம்.