மதுரை: மதுரைஉயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில், அக்குற்றச்சாட்டு குறித்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
வேடசந்தூரைச் சேர்ந்த மரியசெல்வி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”எனது தாய் மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக உள்ளார். மக்கள் பேராயர் என அனைத்து மதத்தினராலும் புகழப்பட்டவர்.
இந்நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் பல தகாத செயல்களில் ஈடுபட்டர் என வார இதழ் ஒன்றில் (நவீன நெற்றிக்கண்) செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இது அவரது மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது. எனவே இந்த வார இதழ், அதில் பணியாற்றும் நிருபர்கள் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டு சம்பந்தமாக கொடைக்கானல் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தனர் இதனைத்தொடர்ந்து அவதூறாக செய்தி வெளியிட்ட நபர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ரெய்டு: கணக்கில் காட்டப்படாத வருவாய்?