மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன்.
இவரது தலைமையில் பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், அந்த பகுதியில் கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
3 நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
இது குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது: வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இந்த ஊரின் மேற்கு பகுதியில் உள்ள பெரிய கண்மாயில், நீர் வெளியேறுவதற்கான மூன்று கண் மடை அமைந்துள்ளது.
முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் உள்ளன.