தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க தமிழகத்தில் இதுவரை எந்த திட்டமும் இல்லை - உயர் நீதிமன்றக்கிளை - Thamirabarani irrigation problems

Madurai Bench cases today: தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி அளிக்கப்பட்ட மனுவின் விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தாமிரபரணி ஆறு: விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு
தாமிரபரணி ஆறு: விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு

By

Published : Aug 18, 2023, 2:29 PM IST

மதுரை:நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபநாசம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி அளிக்கப்பட்ட வழக்கை நீதிபதி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு ஆண்டு முழுவதும் வற்றாமல் பாய்ந்து கொண்டிருப்பதால் "ஜீவ நதி" என்று அழைக்கப்படுகிறது.

பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீரைப் பயன்படுத்தி மட்டுமே பல ஆண்டுகளாக விவசாயம் செய்வதாகவும், ஆற்று நீர் மூலம் மூன்று வகையான சாகுபடிகள் நடப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆற்றின் குறுக்கே எட்டு அணைக்கட்டுகள் உள்ள நிலையில், இந்த அணைக்கட்டுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரானது பாசனத்திற்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நீர் பாசனம் செய்யப்படுகிறது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

கடந்த மாதம் ஜூலை 18ஆம் தேதி பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து வடக்கு கொடைமேலழகன் கால்வாய், தெற்கு கொடைமேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் கால்வாய் வழியாக 18,090 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 3015 மில்லியன் அடி தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாசனத் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, நெல் சாகுபடியும் பாதிப்படைந்தது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்வதறியாமல் உள்ளனர்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வடக்கு கொடைமேலழகன் கால்வாய், தெற்கு கொடைமேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், நீர்நிலைகளை பாதுகாக்க நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நதிகளை இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பிரச்னை இருந்திருக்காது.
மேலும், மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து ஏற்கனவே இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த வழக்கையும் சேர்க்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மாரி செல்வராஜ் நகைச்சுவை படங்களையும் இயக்க வேண்டும் - நடிகர் வடிவேலு!

ABOUT THE AUTHOR

...view details