தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாலிக்குத் தங்கம் திட்டத்தை மாற்றியது ஏன்? - நிதியமைச்சர் விளக்கம் - Thalikku Thangam scheme

தாலிக்குத் தங்கம் திட்டத்தை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றியுள்ளோம் என்றும்; உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதன் மூலம் அவர்களே சுயமாக உயர்கல்வி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிதியமைச்சர்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிதியமைச்சர்

By

Published : Mar 20, 2022, 6:17 PM IST

மதுரை:தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதன்மூலம் அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இந்த திட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தாலும், தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கு அரசியல் கட்சினர் எனப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றம்

இந்தநிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கலைஞரின் 'வருமுன் காப்போம் திட்டத்தின்'கீழ் மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) தொடங்கி வைத்து, ஆறு ஆம்புலன்ஸ் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பில் 486 பயனாளிகளுக்கு 59.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிதியமைச்சர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "கல்வி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியாக அமையும். மனிதநேயம், மக்கள் பற்று, சமுதாயப் பற்றே திராவிட மாடல். திமுகவினர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் கொள்கை அரசியல்வாதிகளாகவே இருந்து வருகிறோம்.

பெண்கள் முன்னேற்றத்திற்கேற்ப தாலிக்குத் தங்கம் என்கிற திட்டத்தை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றியுள்ளோம். இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதால், அவர்களே சுயமாக உயர்கல்வி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வாய்ப்பாக அமையும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவெடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் அடிப்படைக் கொள்கைக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகளின் கருத்து என்ன?

ABOUT THE AUTHOR

...view details