மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அவ்விழாவின் 12ஆம் நாளான இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பாடாகி தெப்பக்குளம் அருகில் இருக்கும் மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலை வந்தடைந்தனர். பிறகு அங்கிருந்து தெப்ப உற்சவம் நடைபெறும் திருக்குளத்தில் அமைந்துள்ள இடத்திற்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதுகுறித்து மீனாட்சி கோயில் பட்டர் காலா ஸ்ரிநாதன் கூறுகையில், ’இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய தெப்பத் திருவிழா பகல் இரண்டு முறையும் இரவு ஒரு முறையும் என மூன்று முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருக்குளத்திற்குள் வலம் வரும். பிறகு இரவு புறப்பாடாகி மீண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வார்’ என்றார்.
காலை 11 மணி அளவில் தெப்பத்தை வடம் பிடித்து இழுக்கும் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் அக்னிவீரன் மற்றும் அப்பகுதி இளைஞர்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. வெப்பத்திற்கு உள்ளும் வெளியிலும் மொத்தம் 150 பேர் வடம் இழுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.