தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கழிவுகளின் கூடாரமாக மாறும் தென்காசி… தடுக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு - மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு

கடந்த 2022-23ஆம் ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியது தொடர்பாக 9 வழக்குகள் தமிழ்நாடு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 5:48 PM IST

மதுரை: தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த அவமதிப்பு வழக்கில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா தரப்பில், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில், சுகாதாரத்துறை, காவல் துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவக்கழிவுகள் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு சுகாதாரத்துறையின் முதன்மைச்செயலாளர் செந்தில்நாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் . அதில், 'மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புப்படி மாவட்டங்களில் மருத்துவக்கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் கண்காணிப்புக்குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக வருவதற்கு, கோவை மாவட்டத்தில் 14 வழிகளும், கன்னியாகுமரிக்கு 15 வழிகளும், தேனி வழியாக 3 வழித்தடங்களும், தென்காசி வழியாக 2 வழித்தடங்களும் உள்ளன. எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டு வராதவாறு சிசிடிவி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவது தொடர்பாக எந்த விதமான வழக்குகளும் கோவை, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 2022- 2023ஆம் ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தான் தொடர்ந்து கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

தென்காசி மருத்துவக் கழிவுகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும், மருத்துவக் கழிவுகளை கொட்டுவது தொடர்பாக கண்காணிப்பு குழுவினை நியமித்து எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது’ என பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: Maha Shivratri: கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details