மதுரை: வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்த கனகசுந்தர் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 01.04.2014 முதல் 31.01.2017 வரை செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகையை தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆனால், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விடக் குறைவான ஊதியத்தை வழங்கி வருகின்றனர். இதுசம்மந்தமாக, கடந்த 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 2017ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தாத காரணத்தால், 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், 2019ஆம் ஆண்டு நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும், 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதிய நிலுவைத்தொகை வழங்கவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று (செப்.22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆறுமுகம், பொதுமேலாளர் இளங்கோவன் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ராஜேஸ்வரன் மற்றும் முருகேசன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அதில் நீதிபதி, “2016ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தற்போதுவரை நிறைவேற்றவில்லை என தெரியவந்துள்ளது. தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை.