தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் பிரதமர் யார்? விடைச்சுருக்கத்தில் ராகுல்காந்தி என்று உள்ளது என கூறுவது அபத்தம்..

இந்தியாவின் பிரதமர் யார்? என்பது கேள்வியாக இருந்தால், அதற்கு நரேந்திர மோடி என பதில் அளித்தால், விடைச்சுருக்கத்தில் ராகுல்காந்தி என்று தான் உள்ளது என்று கூறுவது அபத்தமாகும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Nov 10, 2022, 10:43 AM IST

மதுரையைச் சேர்ந்த வினோபிரதா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,”நான் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பணித் தேர்வு எழுதினேன். இந்த தேர்வில் 150-க்கு 97.77 மதிப்பெண் பெற்றேன். நான் BC பெண்கள் பிரிவில் வருகிறேன்.

இப்பிரிவுக்கு கட்-ஆப் மதிப்பெண் 98.196 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நான் குறைவாக மதிப்பெண் பெற்றதால் என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவில்லை. ஆசிரியர் பணித் தேர்வில் கேட்கப்பட்ட 71 மற்றும் 108 வது கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்துள்ளேன்.

இதனால் எனக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கியிருந்தால் நான் ஆசிரியர் பணிக்கு தேர்வாகியிருப்பேன். எனக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,” மனுதாரர் இரு கேள்விக்கும் சரியாக பதில் அளித்துள்ளார். பின்னர் 71வது கேள்வி ஆட்சேபனை காரணமாக நீக்கப்பட்டுள்ளது. 108வது கேள்விக்கு மனுதாரர் சரியாக பதில் அளித்துள்ளார். ஆனால் விடைச்சுருக்கத்தில் வேறு பதில் இருப்பதால், அந்தக்கேள்விக்கு மனுதாரருக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை.

விடைச்சுருக்கத்தில் இடம் பெற்றுள்ள பதில் சரியானது என்பதை வல்லுனர் குழு நிரூபிக்கவில்லை. விடைச் சுருக்கத்தில் இருப்பது தான் சரியான பதில் என வல்லுனர் குழு எப்படி முடிவுக்கு வந்தது என்பது தெரியவில்லை. சத்யமேவ ஜெயதே என்பது நமது தேசிய முழக்கம். சில சூழ்நிலைகளில் நீதித்துறை முழுமையாக ஆய்வு மேற்கொள்ள முடியாது. ஆனால் தவறு வெளிப்படையாக தெரியும் போது நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியாது.

இந்தியாவின் பிரதமர் யார்? என்பது கேள்வியாக இருந்தால், அதற்கு நரேந்திர மோடி என பதில் அளித்தால், விடைச்சுருக்கத்தில் ராகுல்காந்தி என்று தான் உள்ளது என்று கூறுவது அபத்தமாகும்.

மனுதாரர் சரியாக பதில் அளித்திருக்கும் போது நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் 150-க்கு 98.77 மதிப்பெண் பெற்றதாக கருதி தாமதம் இல்லாமல் அவருக்கு ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?

ABOUT THE AUTHOR

...view details