மதுரை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் நேற்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த 2ஆவது பெரிய மாநகரமாக திகழும் மதுரையில் அகலமான சாலைகள், மேம்பாலங்கள் இல்லை. நாளுக்கு நாள் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருகி வருகிறது.
மாற்று ஏற்பாடு தேவை
நகருக்குள் வந்து வெளியேறும் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. அதற்குத் தகுந்தபடி சாலை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. எனவே அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தை எதிர்கொள்ள மாற்று ஏற்பாட்டை தேடா விட்டால், 2030இல் மதுரை நகரில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 6 கி.மீ முதல் 8 கி.மீ வரையே இருக்கும்.
பிரதமர் அறிவிப்பு
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 14.71 லட்சம் ஆகும். மாவட்டத்தின் மக்கள் தொகை 25 லட்சம்.
தற்போது மக்கள் தொகை 35 லட்சத்தை தாண்டிவிட்டது. 2025 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவையை 25-க்கும் அதிக நகரங்களுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். மதுரையை இந்த 25 நகரங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்து மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
சட்டம் என்ன கூறுகிறது?
10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை உள்ள எந்த நகரத்திற்கும் மாநில அரசு மொத்தச் செலவில் 50 சதவீதத்தை ஏற்று அத்திட்டத்தை பரிந்துரைக்கும்பட்சத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் சட்டத்திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.