மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கு அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் சார்பாக பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத் தலைவர் லெனின் பேசுகையில், டாஸ்மாக் கடை ஊழியர்களிடையே, சுயவிருப்பு வெறுப்பின் காரணமாகவும், ஆதாயம் அடையும் நோக்கத்துடனும், பழிவாங்கும் நோக்குடன் நடந்துள்ள முறையற்ற ஆய்வின் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
கடை ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, தேனி மாவட்டங்களில் எவ்வித அறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். டாஸ்மாக் அலுவலர்களுக்கு மாமூல் வசூலித்துத் தரும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.