நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் காலியாகவுள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஜனவரி மாதம் 12ஆம் தேதி பெற்றது. முதலில் வெளியான கீ ஆன்சர்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. பிசி பிரிவில் எனக்கு வேலை கிடைக்கும்.
இறுதியாக வெளியிடப்பட்ட கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. இதனால், 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் எனக்கான வாய்ப்பு பறிபோனது. கடந்த 1947க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என்ற கேள்வி்க்கு மூன்று முறை என்பதே சரியான விடை. பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டதால், அதை சரியான விடை என குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.
கடந்த 2016ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பை, தவறுதலாக மதிப்பு குறைப்பு என கருதி 4 முறை என தவறான விடைக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டது. எனவே, சரியான மதிப்பெண் அளித்த என்னை, அடுத்தக் கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், பொருளாதார நிபுணர்கள் நான்கு முறை என்பதே சரியான விடை என கூறியுள்ளனர். மதிப்பு குறைப்பு என்பது இந்திய பணத்தை அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அமெரிக்க டாலருக்கு ரூ.70 என்பது, மதிப்பு குறைப்பிற்கு பிறகு ரூ.80 என்ற அளவில் இருக்கும்.
இந்த முறையில் இதுவரை மூன்று முறை மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதனால், 99 விழுக்காட்டுக்கு ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது. நான்கு முறையே சரியான விடை என்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான நிபுணர்களின் தவறான கருத்தாகும்.
நிபுணர்களின் தவறான கருத்து அடிப்படையில் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடையளித்த பலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும். நிபுணர்களின் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளது.
சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே நிபுணர் குழுவில் இருக்க வேண்டும். தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் தவறானது அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் சரியான விடையளித்துள்ளதால் அவர்களுக்கு 0.5 மதிப்பெண் வழங்கி, அடுத்தக்கட்ட தேர்வுக் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.