மதுரை: தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான வேஷ்டி, சேலைகளை தமிழ்நாடு நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருள்களை அருகமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.
சில சமயங்களில், அந்த கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதற்கு மாற்றாக அவற்றை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கொள்முதல் அரசின் கொள்கை ரீதியான முடிவு என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலர், தமிழ்நாடு வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி