மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 300 தூய்மைப் பணியாளர்களுக்கு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ”தமிழ்நாடு அரசால் பூரண மதுவிலக்கு கொண்டுவர முடியாது என்ற பட்சத்தில், 45 நாள்கள் மதுக்கடைகளை மூடியது தவறு. ஆன்லைன் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை மூலமாக மது விற்பனையை மேற்கொள்ள முடியும். இந்தியாவின் பொருளாதாரத்தை பொறுத்தவரை, இறங்குமுகத்தில்தான் இருந்தது. கரோனா பெருந்தொற்று பரவியதற்கு பிறகு, மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பாகவே, அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரண நிதியை அரசு வழங்கியிருக்க வேண்டும்.
’கோயம்பேடு கரோனா பரவலுக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் ’ நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிதி பொதுமக்களுக்கு போதுமானதாக இருக்காது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிதியாக வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுத்திருந்தோம். பூரண மதுவிலக்கை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் மாறுபட்ட கருத்து உள்ளது. பூரண மதுவிலக்கு என்பது தோல்விகரமான திட்டம். இதனால் கள்ளச்சாராய மாபியா உருவாகும் என்பது என்னுடைய கருத்து. வழிபாட்டு இடங்களுக்கு அருகே மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது. ஆரம்பக்கட்டத்திலேயே மதுபான விற்பனையை ஆன்லைனில் கொண்டு வந்திருக்க வேண்டும். நடிகர் ரஜினி கூறியவாறு, அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வராது” என்றார்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்: சூடு பிடிக்கும் இளநீர் வியாபாரம்!