மதுரை:வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி வரியை கடைப்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளையும், பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வீதங்கள் விதிப்பதில் தொழில், வணிகத்துறை எதிர்கொண்டு வரும் சிரமங்களை அடையாளம் கண்டு ஜிஎஸ்டி கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. டட்டார் தலைமையில் ஓர் ஆலோசனைக் குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் மிக்க நன்றி. ஜிஎஸ்டி வரி ஓர் முற்போக்கான வரிமுறை என்ற காரணத்தால், இது சிறந்த எளிமையான வரிமுறையாக (Good and Simple Tax) இருக்கும் எனக் கருதி தொழில் வணிகத் துறையினர் இவ்வரிமுறைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அறிக்கை, விளக்கம், திருத்தம் என ஜிஎஸ்டி சட்ட அமலாக்கத்தை குழப்பிவிட்ட காரணத்தினால், ஜிஎஸ்டி வரிமுறை ஓர் 'பயங்கரவாத வரிமுறையாக' மாறிவிட்டது.
இதனால் சிறு வணிகர்கள் பலர் சட்ட விதிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் தொகையை அபராதமாகவும், வரியாகவும், வட்டியாகவும் செலுத்த வேண்டி வருமோ என அஞ்சி தங்கள் வணிகத்தையே நிறுத்தி விட்டார்கள்.
தொழில் வணிகத் துறையினர் பயன்: இந்தநிலையில், தமிழ்நாடு அரசு ஆலோசனைக் குழு அமைத்துள்ளது. பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), சேவைத் துறையினர் மற்றும் நுகர்வோர் இவ்வரிச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் சந்திக்கும் பிரச்சனைகளை மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அறிவித்திருப்பதன் காரணமாகத் தொழில் வணிகத் துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.