சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக தற்போது 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
இதனையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை 6ஆம் கட்ட அகழாய்விற்கான மத்திய தொல்லியல் துறையின் அனுமதியையும், ஆய்வுப் பணிகளுக்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் இதற்கான ஆய்வுப்பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநர் த.உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.