மதுரை:இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி வளைகுடா நாடுகளான சவுதி அரேபியாவில் 27 லட்சத்து 94 ஆயிரத்து 947 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 144 பேரும், கத்தாரில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 550 பேரும், பஹ்ரைனில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 658 பேரும், ஓமனில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 141 பேரும் பணி நிமித்தமாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் உடல் உழைப்புத் தொழிலாளர்களாவர். இது போக அபுதாபி, குவைத், ஷார்ஜா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் ஏராளமானோர் புலம் பெயர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வீடு மற்றும் அலுவலக வேலைக்கு என்று முகவர்களால் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஓமன் நாட்டில் சிக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், "காரைக்குடியில் உள்ள ஒரு முகவர் மூலமாக மஸ்கட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து என்னையும் என்னோடு வந்த வேறு சில பெண்களையும் ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள ஒரு முகவரிடம் எங்களை ஒப்படைத்தனர். அவர் ஒரு அறையில் எங்கள் அனைவரையும் அடைத்து வைத்தனர். அதுபோன்ற ஒவ்வொரு அறையிலும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் இருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் மட்டும் 200 பேருக்கும் மேல் இருந்தனர். அதுபோன்ற அறைகள் நூற்றுக்கும் அதிகமாக அங்குள்ளன. வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லும்போது, எந்தவித பணமும் தேவையில்லை. அலுவலகம் மற்றும் வீட்டு வேலைப் பணிகள் என்று சொல்லியே அழைத்துச் செல்கின்றனர்.
ஆனால் அங்கு அவர்களின் தேவைக்காக பெண்களைப் பயன்படுத்துகின்றனர். ஆசைக்கு இணங்காதவர்களை, ஊருக்கு அனுப்ப முடியாது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயைக் கட்டினால் மட்டுமே உங்களை அனுப்ப முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். மிக ஏழ்மையான நிலையில்தான் பணம் கட்ட இயலாமல் இதுபோன்று வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறோம். ஆனால், அங்கிருந்து வெளியேற வேண்டுமானால் பணத்தைக் கட்டு என்று நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். ஒருவேளை ஏதேனும் ஒரு வாய்ப்பில் தப்பித்து அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்றால், தூதரக அலுவலர்கள் மீண்டும் முகவர்களிடமே அப்பெண்களை ஒப்படைத்து விடுகின்றனர்.
அப்படி கொண்டு வரப்படும் பெண்களை பெல்ட் உள்ளிட்டவற்றால் அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். சில பெண்கள் அவர்கள் கேட்ட ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மதுரையில் உள்ள உதிரத்துளிகள் என்ற அறக்கட்டளை மூலமாக தொடர்பு கொண்டதால் நான் மீட்கப்பட்டுள்ளேன். என்னைப்போன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
உதிரத்துளிகள் என்ற அமைப்பின் நிறுவனர் அஸாருதீன் கூறுகையில், “தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலை செய்வதற்காக சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது நீண்ட காலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு கிராமப்புறங்களைச் சேர்ந்த படிப்பறிவற்ற பெண்களை ஒரு ரூபாய் கூடக் கட்டத்தேவையில்லை. மாதம் ரூ.30 ஆயிரம் அல்லது ரூ.40 ஆயிரம் சம்பளம் என ஆசை வார்த்தைகள் காட்டி அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழிலுக்காக அடிமையாக விற்கக்கூடிய நிலை உள்ளது.