தமிழ்நாடு

tamil nadu

ஒரு கையில் கபசுர குடிநீர், மறுகையில் மதுவா ? - உயர் நீதிமன்றம்

By

Published : May 11, 2020, 11:33 PM IST

மதுரை : அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கபசுர குடிநீரையும், மறுகையில் அதனைப் பாதிக்கும் மதுவையும் வைத்திருப்பது முரண்பாடாக உள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

MADURAI
MADURAI

மதுரையைச் சேர்ந்த போனிபாஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் நோய்த் தொற்று பரவல் சமூக பரவல் நிலையை அடைந்திருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மது அருந்துதல் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் நிலையில் மது பயன்படுத்துவோர் எளிதாகக் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு காணொலி காட்சி வாயிலாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில்,"சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்துள்ளது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் ,"உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையும், இந்த வழக்கின் கோரிக்கையும் ஒன்றாக இருப்பினும், அதற்கான காரணங்கள் வேறாக உள்ளது.

சமூக இடைவெளி பின்பற்றப்படாது என்பதால் தடை கோரப்பட்டது. அரசுத் தரப்பில் சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவை முறையாகப் பின்பற்றப்படாததால், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டனர். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை மதுவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மதுவைப் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பாற்றலைக் குறைப்பதால், கரோனா அந்த நபர்களை எளிதாகத் தாக்கும் வாய்ப்புள்ளது. அவரது உடல் கரோனாவுக்கு எதிராகப் போரிடும் ஆற்றலை இழக்கிறது என்பதையும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, மது விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதே கோரிக்கை. அரசும் ஒருபுறம் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க, கபசுர குடிநீரையும் மறுபுறம் அதனைப் பாதிக்கும் மதுவையும் விற்பனை செய்கிறது.

மதுவைக் குடித்து கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகுபவரால் அவரது குடும்பத்தினரும், அவர் வசிக்கும் பகுதியினரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன.

குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கின்றன. 7ஆம் தேதி மது அருந்தியவர்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்தது இதற்குச் சான்றாக அமைகிறது.

தமிழ்நாடு அரசு கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுடன் ஒப்பிடுகிறது. கரோனா பாதிப்புகள் குறைவாக உள்ள கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களோடு ஒப்பிட வேண்டும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

அதற்கு அரசுத்தரப்பில்,"டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீறப்பட்ட இடங்களில் உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதோடு இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை" என வாதிடப்பட்டது.

இதையடுத்து, "அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கபசுர குடிநீரையும் மறுகையில் அதனைப் பாதிக்கும் மதுவையும் வைத்திருக்கிறது. இது முரண்பாடாக உள்ளதே" எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details