உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பிரேமலதா பேசுகையில், "விஜயகாந்த் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே வெற்றிபெற்றவர். மற்ற கட்சிகள் போல் அல்லாமல், பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தவர். அவர் சிங்கநடை போட்டு வந்து பரப்புரை நிகழ்த்துவார்.
மக்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் உறுதியாகக் கூறுகிறேன். விரைவில் பழைய விஜயகாந்தாக தமிழ்நாடு முழுவதும் நடந்தே தமிழ்நாட்டு மக்களைச் சந்திப்பார். இலவசங்களுக்கும், குடத்திற்கும், மூக்குத்திக்கும் ஏமாந்துபோய் வாக்களித்து, இதுவரை நல்லாட்சியை தமிழ்நாடு பார்க்காமலேயே போய்விட்டது.
பிரேமலதா விஜயகாந்த் பேசிய காணொலி இந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்பு, மதுரை தெற்கு ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்திடம் ஒரு கோரிக்கைவைத்தனர். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. சட்டங்களினால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு வராது எனக் குறிப்பிட்டுக் காட்டச் சொன்னார்கள். அவர்களுக்கு இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக பதிலளிக்கிறேன். இந்திய அரசு சட்டத்தினால் உறுதியாக தமிழ்நாடு மக்களுக்கு பாதிப்பு கிடையாது.
இயற்கை சீற்றங்கள் தொடங்கி கொரோனா உள்ளிட்டவை சாதி, மதம், மொழி பார்த்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இன்றைக்கு சில கட்சிகள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்துவருகின்றன. குள்ளநரியின் புத்தி நமக்கும் வேண்டும். குள்ள நரி போல குழி பறிப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ள குள்ளநரி புத்தி வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜூ!